மகனின் பரீட்சை நிறைவடையும் வரை தாயின் இறப்பை மறைத்து வைத்த தந்தை

மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை தந்தை மறைத்து வைத்த சம்பவம் காலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி பெண்ணொருவர் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.

இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

அவர் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிய இன்னும் 4 நாட்களே இருந்துள்ளன.

தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அதனை மறைத்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது மகனின் பரீட்சை நிறைவடைந்துள்ளதுடன், அதுவரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று வியாழக்கிழமை காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்