உலகை நடுங்க வைத்துள்ள 33 வயதான சீரியல் கில்லர் : 42 பெண்கள் கொலை நடந்தது என்ன?

-ச.சந்திரபிரகாஷ்-

உலகில் சில வகையான கொடூரமான சீரியல் கில்லர்கள் இருப்பார்கள். அப்படிதான் கென்யாவில் 33 வயதான சீரியல் கில்லர் உலக நாடுகளை மிரள வைத்து இருக்கிறான்.

கென்யாவின் தலைநகரான நைரோபியில் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்து பலரது உடல்களை அடையாளம் தெரியவாறு சிதைத்து குப்பை கிடங்கில் தூக்கி வீசி இதுவரை சினிமாவில் பார்த்ததை விட பல மிரள வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடி கைது:-

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தலைநகரின் தெற்கில் உள்ள முகுரு குடிசைப் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்ட ஒன்பது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யூரோ 2024 இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த நைரோபி பார் அருகே திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலின்ஸ் ஜுமைசி கலுஷா என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெனரல் டக்ளஸ் கஞ்சா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் பல மிரள வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீரியல் கில்லரின் கென்யா வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது மிரண்டு போனார்கள். வீடு முழுவதும் அரிவாள், இறப்பர் கையுறைகள், செலோடேப் ரோல்கள், நைலான் சாக்குகள் உள்ளிட்டவை அங்கே இருந்துள்ளன.

இந்த கொடூரன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார்.

இந்த கொடூரங்களை எல்லாம் செய்தவர் கென்யா நாட்டை சேர்ந்த காலின்ஸ் ஜுமைசி (வயது-33) இவரை அந்நாட்டு மக்கள் ஒரு “காட்டேரி” என்றே சொல்கிறார்கள். மனித உயிருக்கு மரியாதை இல்லாமல் பலரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான்.

குப்பைக் கிடங்கில் பெண்களின் சடலங்கள்:-

கென்யா தலைநகர் நைரோபியின் முகுரு என்ற பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் சில வாரங்களுக்கு முன்பு 9 பெண்களின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் மக்கள் அங்கே குப்பைகளைக் கொட்டிய நிலையில், இந்த கொடூரன் அதையே தான் கொலை செய்த பெண்களின் உடல்களை வீசி எறியப் பயன்படுத்தி இருக்கின்றான்.

இந்த குப்பைக் கிடங்கிற்கு அருகே உள்ள பாழடைந்த அறையில் தனிமையில் வசித்து வந்த ஜூமைசி பெண்களை தனது காதல் வலையில் மயக்கி தனது வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு வைத்து அவர்களைக் கொன்று உடல் பாகங்களைச் சிதைத்துள்ளான்.

தனது வீட்டுக்கு கடந்த 2022 ஆண்டு முதல் இடம்பெற்று வந்துள்ள இச்சம்பவங்களின் பின்னணியில் அழைத்து வந்த பெண்களை பாலியல் வல்லூறவிற்கு பின்னர் கொலை செய்துள்ளானா என்பது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களிலேயே இதன் பின்னணியில் ஜூமைசிதான் இருக்கிறான் என்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

பெண்களின் உள்ளாடைகள் :-

கலுஷாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய நிலையில், அங்கே பல கையடக்க தொலைபேசிகள், அடையாள அட்டைகள் , கூரிய ஆயுதங்கள் , பெண்களின் உள்ளாடைகள் மற்றும் கொலை செய்துவிட்டு பெண்களின் உடல்களை போடக் கூடிய சாக்குகள் என பலவற்றை கண்டுபிடித்தனர் இதன் மூலம் இன்னும் பல நூற்றுக்கணக்கான பெண்களை கொலை செய்யும் திட்டம் இருந்துள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த பொருட்களின் மூலம் ஒவ்வொரு கொலையையும் எந்தளவுக்குத் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பதைக் காட்டுகிறது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் எல்லாமே சிதைந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சாக்குகளில் பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட கைகால்கள் மற்றும் உடல் பகுதிகள் இருந்தன. மேலும் எந்த சடலத்திலும் துப்பாக்கி சூட்டுக் காயங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் மாயமானதாக அளிக்கப்படும் புகார்களை கென்ய பொலிசார் உரிய முறையில் விசாரித்து இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகச் சென்றிருக்காது என்ற பொது மக்கள் மத்தியில் இருந்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றது.

சீரியல் கில்லரிடம் நடத்தப்படும் தொடர் விசாரணைகள் மூலம் இன்னும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்