முச்சக்கரவண்டி சாரதி செய்த மனிதாபிமான செயல்

-பதுளை நிருபர்-

உள்ளம் நெகிழ்வடையும் ஒரு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மடுல்சீமையில் இடம்பெற்றுள்ளது.

மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார் சுகயீனமுற்ற நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் உயிரிழந்த தன் தாயார் அணிந்திருந்த தங்க ஆபரணங்களான, 2 பவுன் சங்கிலி ஒன்று, மோதிரம் ஒன்று, ஒரு பவுன் மதிக்கத்தக்க தோடுகள் ஒரு சோடி, 2440 ரூபாய் பணம் என்பவற்றை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு, பதுளையில் இருந்து பசறை வழியாக பிட்டமாறுவை பகுதிக்கு முச்சக்கர வண்டியில் செல்லும் போது, பியாஜியோ ரக முச்சக்கர வண்டியின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைப்பை தவறி வீதியில் விழுந்துள்ளது.

இதனை அவதானிக்காத பெண்ணும் தாய் இறந்த சோகத்தில் தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதன்போது, மாளிகாத்தன்னை பகுதியில் இருந்து யூரி பௌத்த விகாரைக்கு செல்வதற்காக விகாரையில் தேரரை ஏற்றிக் கொண்டு சென்ற N.தியாகராஜா என்ற யூரி பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி மடூல்சீமை செல்லும் எவீதியில் 6 ம் கட்டைப் பகுதியில் குறித்த கைப்பையை வீதியில் இருந்து கண்டெடுத்துள்ளார்.

குறித்த கைப்பையை பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததோடு, பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையின் விலாசத்தை அவதானித்து, உடன் மடூல்சீமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததன் பின்னர் குறித்த பெண்ணை பசறை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து குறித்த பெண்ணிடம் மேற்குறிப்பிட்ட பொருட்களடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி ஓட்டுநர் தியாகராஜாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.