நடிகை தமன்னாவுக்கு எதிராக மாணவர்களின் பெற்றோர் போராட்டம் : காரணம் என்ன?

இந்தியாவின் பெங்களூர்- ஹெப்பாலில் உள்ள சிந்தி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பாடப்புத்தகத்தில் நடிகை தமன்னா பாத்தியா பற்றி அச்சிடப்பட்டுள்ள அத்தியாயம் தொடர்பில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், பாடசாலை நிர்வாகம் நடவடிக்கையும் எடுக்காததால், கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கர்நாடகாவில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தொடர்புடைய நிர்வாகத்தை பெற்றோர் அணுகியுள்ளனர்

குறித்த பாடப்புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் நடிகர் ரன்வீர் சிங் போன்ற சிந்தி சமூகத்தின் முக்கிய மற்றும் வாழ்வில் வெற்றிகரமான நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் நடிகை தமன்னா தொடர்பான உள்ளடக்கத்தில் மட்டுமே சிக்கல் இருப்பதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் 7 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்தி சமூகம் பற்றிய அத்தியாயம் உள்ளது. அதில் “பிரிவினைக்குப் பின் வாழ்க்கை : சிந்துவில் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் சண்டை, 1947 முதல் 1962 வரை”  என்ற தலைப்பில் சிந்தி சமூகத்தின் வரலாறு பற்றிய பாடம் உள்ளது.

குழந்தைகள் மற்றொரு கலாச்சாரத்தைப் பற்றி அறிவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,  என தெரிவித்துள்ள பெற்றோர்கள், ஆனால் எங்கள் ஆட்சேபனை என்னவென்றால், தரம் 7 மாணவர்களுக்கு பொருந்தாத ஒரு நடிகையை பற்றி அத்தியாயத்தில் உள்ளது,  என தெரிவித்துள்ளனர்.

சமூகத்தில் உள்ள மூத்த நடிகர்கள் பற்றிய பாடங்கள் குறித்து எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் இந்த நடிகையைப் பற்றி குழந்தைகள் இணையத்தில் தேடினால், அவர்கள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை பெறுவார்கள், ஆகவே இது “தகாத உள்ளடக்கம்”  என பெற்றோர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த பாடப்புத்தகம் தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்தால் பாடசாலையை விட்டு மாணவர்களை நீக்கி சான்றிதழ் தருவதாக பாடசாலை நிர்வாகம் மிரட்டுவதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பாடப்புத்தகத்தில் உள்ள நடிகை தமன்னா தொடர்பான உள்ளடக்கம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சிந்தி இன மக்கள்

சிந்து சமவெளியின் பெரும் பரப்பில் வாழ்ந்தமையால் அந்த நாகரிகத்தோடு ஒரு தொன்ம உறவுப் பரிணாமத் தொடர்பு கொண்டவர்கள் சிந்தி இன மக்கள் என இந்திய வரலாறு சொல்கின்றது.
அந்த சமவெளியில் சரஸ்வதி என்னும் நதியும் இமயத்தில் தோன்றி சிந்துவுக்கு இணையாகப் பல நூற்றாண்டுகள் பாய்ந்து பின்னர் திசை மாறி கிழக்கே அலகாபாத்தில் ஆழ்பிரவாகமாக கலந்தது என்ற கருத்தும் நிலவுகிறது
இங்கு இந்துக்களே பூர்வ குடியினர்.
மனித வாழ்க்கையின் 3 முக்கிய அம்சங்கள் உணவு, உடை, உறையுள் (இல்லம்).
சிந்தி இன மக்கள் இந்த மூன்றோடும் சம்பந்தப்பட்ட தொழிலில் தான் விரும்பி ஈடுபடுவர் என சொல்லப்படுகின்றது.
அல்வா/ மிட்டாய் கடை, ஹோட்டல், துணிக் கடை, ரியல் எஸ்டேட் போன்றவை தான் இவர்களின் தொழிலாக இருந்தது.
அங்கு தான் மனிதனுக்கு ஈர்ப்பும் செல்வம் புரட்டும் வாய்ப்பும் அதிகம் என அவர்கள் நம்பினார்கள் என சொல்லப்படுகின்றது.
ஊர்களில் கூட தெருவில் கஜக் கோலுடன் சிந்தி வியாபாரி நடக்க,  பின்னால் மில் துணி, பாவாடை சீட்டி, பிளவுஸ் துணி சுமந்து பணியாள் வரும் காட்சி 1950 கள் வரை இந்தியாவில் அன்றாடம் காணக்கூடிய காட்சியாக இருந்தது எனவும் சொல்லப்படுகின்றது
இவர்கள் பெரும்பாலும் சைவ உணவு தான் உண்பார்கள் அசைவம் விழா, விருந்தில் மட்டும் உண்பார்கள். உணவின் பின் இறுதியாக சுட்ட மசாலா அப்பளம் பரிமாறுவார்கள். அது வயிற்றில் இருக்கும் உண்ட பண்டங்களின் அதிக எண்ணெய் பதத்தை உறிஞ்சிச் சுருட்டி எடுத்து விடும்,  என்று சிந்தி மக்களின் உணவு பழக்க வழக்கம் பற்றி வரலாறு சொல்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்