அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கினாலேயே இலங்கையின் பொயிலர் கோழி உற்பத்திப் பண்ணைத் தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது

அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கினாலேயே  இலங்கையின் பொயிலர் கோழி உற்பத்திப் பண்ணைத் தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலயே பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையின் பொயிலர் கோழி உற்பத்திப் பண்ணைத் தொழில் கோடிக்கணக்கான வரியை ஈட்டுகிறது, பொயிலர் கோழி கோழிப் பண்ணைத் தொழில் துறையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பணிபுரிகின்றனர்.

அண்டை நாடான இந்தியா கடந்த ஆண்டு பொயிலர் கோழி ஏற்றுமதியில் 180 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியது. ஆனால் இலங்கை பொயிலர் கோழித் தொழிலில் இருந்து ஏயுவு வரி அறவிட்டு, 30 சதவீத வரி வருவாமனத்தை ஈட்டுகிறது.

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பொயிலர் கோழி 1150 ரூபாவாகும். ஆனால் இந்தியாவில் ஒரு கிலோ பொயிலர் கோழி 800 ரூபாவாகும். இலங்கை உற்பத்தியாளர்கள் செலுத்தும் வரியுடன் இலங்கையில் ஒரு கிலோ பொயிலர் கோழியின் விலை 1150 ரூபாவாகும்.

பொயிலர் கோழி உற்பத்திப் பண்ணைத் தொழில் உலக அளவில் போட்டி நிறைந்த தொழிலாக மாறியிருக்கிறது.

சோளம் கால்நடை தீவனத்தில் இன்றியமையாத பொருளாகும். சோளம் இறக்குமதியில் முறையான கொள்கை அமல்படுத்தப்படவில்லை. கால்நடை தீவனம் இறக்குமதி செய்பவர்களுக்கு உரிமப் பத்திரம் வழங்கும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது, ​​மூன்றாம் தரப்பினருக்கு சோளத்தை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் சோளத்திற்கு பற்றாக்குறையை உருவாக்கி, விலையை உயர்த்தி, கால்நடை தீவனத்தின் விலையை அதிகரித்து, அதன் மூலம் நாட்டில் கோழி உற்பத்தியின் போட்டித்தன்மையை இந்த அரசாங்கம் அழித்து வருகிறது.

இலங்கையும் தாய்லாந்தும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதற்கான ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகே வரியில்லா ஏற்றுமதிச் சலுகைகள் கிடைக்கும்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படுமானால், 15 வருடங்களின் பின்னரே அவர்களுக்கு இந்த வரியில்லா வசதி கிடைக்கும்.

இவற்றைப் ஆராய்ந்து பார்த்து தான் ஒப்பந்தம் கையெழுத்தானதா என்று தெரியவில்லை. தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 15 வருடங்களின் பின்னரே இலங்கைக்கு வரிச்சலுகை கிடைக்கவுள்ளது.

மேலும், தாய்லாந்து பொயிலர் கோழி உற்பத்திப் பண்ணைத் தொழில் மூலம் உலகிற்கு 100,000 மெட்ரிக் டொன்களுக்கு மேல் கோழியினை ஏற்றுமதி செய்துள்ளது. 100 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்து, பொயிலர் கோழி உற்பத்தயிலும் ஏற்றுமதியிலும் உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது.

உள்நாட்டு கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அரசாங்கத்தின் சில அமைச்சுக்கள் தேவையான ஆதரவை இதற்கு வழங்குவதில்லை.

இலங்கையில் கோழிப்பண்ணை தொழில் சரியாக இயங்கினால் பொயிலர் கோழி ஏற்றுமதியை மேம்படுத்த முடியும். அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளால் தான் பொயிலர் கோழி ஏற்றுமதி மற்றும் பொயிலர் கோழித் தொழிலை மேம்படுத்த முடியாதுள்ளது.

இதனால் நாடு டொலர் வருமானத்தை இழந்து வருகிறது, இந்த விவகாரத்தில் வர்த்தக அமைச்சர் தலையிட வேண்டும், என தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்