
தென் கொரியாவில் இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 8000 வேலை வாய்ப்புகள்
தென் கொரியாவில் இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு 8000 வேலை வாய்ப்புகளை வழங்க இலங்கையை தளமாகக் கொண்ட கொரிய மனித வள திணைக்களத்தின் பணிப்பாளர் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் முன்னர் வழங்கப்பட்ட 6500 வேலை ஒதுக்கீட்டை விட அதிகமாக இருப்பதாக அமைச்சர் நாணயக்கார கூறினார்.
இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உற்பத்தித் துறை பிரிவின் கீழ் கொரிய மொழிப் புலமைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கொரிய வேலை இணையதளத்தில் பதிவு செய்துள்ள 600 பேரை கப்பல் கட்டும் துறையில் வேலைகளுக்குப் பரிந்துரைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட வேலை தேடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்இ இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் திகதியுடன் வேலையைப் பெறுவதற்கான காலம் முடிவடையும்.
அதன்படி, இணையதளத்தின் உற்பத்தித் துறையிலிருந்து கப்பல் கட்டுமானத் துறைக்கு வேலைப் பிரிவை மாற்றி இந்தப் பணியிடங்கள் வழங்கப்பட உள்ளன.
இதனால், உற்பத்தியில் இருந்து கப்பல் கட்டும் தொழிலுக்கு தங்கள் வேலை வகையை மாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.
அடுத்த ஆண்டு முதல் E9 விசா பிரிவின் கீழ் கப்பல் கட்டும் துறையில் 900 வெல்டர்கள் மற்றும் பெயிண்டர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு கொரிய மனிதவள திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.