Softlogic Holdings PLC நிறுவனத்தின் முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2025/26 நிதியாண்டில் குழுமத்தின் EBITDA 43 சதவீதம் அதிகரித்து ரூ.17.8 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2022/23 நிதியாண்டில் இது ரூ.7.8 பில்லியனாக இருந்தது.
குழுமத்தின் வருமானமும் 24.5 சதவீதம் அதிகரித்து ரூ.129 பில்லியனாக உயர்ந்துள்ளது. மொத்த இலாபம் 22 சதவீதம் அதிகரித்து ரூ.46 பில்லியனாக பதிவாகியுள்ளது. இதேவேளை, செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து கிடைத்த நிகர பணப்புழக்கம் ரூ.14 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2022/23 நிதியாண்டில் ரூ.7.1 பில்லியன் பண வெளியேற்றம் பதிவாகியிருந்த நிலையில், இந்த மாற்றம் நிறுவனத்தின் செயற்பாட்டு நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக Softlogic தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிறுவனத்தின் நிகரக் கடன் ரூ.117.6 பில்லியனிலிருந்து ரூ.115.9 பில்லியனாகக் குறைந்துள்ளது. வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் ரூ.47.5 பில்லியன் பெறுமதியான கடன் வசதிகளுக்கு மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், பின்னர் மேலும் ரூ.12.2 பில்லியன் கடன்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறுகியகால கடன் அழுத்தங்களை நீண்டகால தவணைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025/26 நிதியாண்டில் Softlogic Holdings வரிக்கு முந்தைய ரூ.24 மில்லியன் இலாபத்தை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.7.5 பில்லியன் வரிக்கு முந்தைய இழப்பு பதிவாகியிருந்தது. எனினும், பங்குதாரர்களுக்குரிய நிகர இழப்பு ரூ.8.63 பில்லியனாக இருந்ததுடன், பங்குதாரர்களின் நிதி நிலுவை எதிர்மறையாக ரூ.66.4 பில்லியனாக தொடர்ந்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாகம், கடன் மறுசீரமைப்பு மற்றும் செயற்பாட்டு முன்னேற்றத்தைத் தொடர்ந்து நீடித்த நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. அதேவேளை, 2026/27 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மீண்டும் வரிக்கு முந்தைய இழப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









