
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்
பணம் செலுத்துவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைகள் தொடர்பான செயன்முறைக்கு உரிய கொடுப்பனவுகளைச் செய்வதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க 24×7 மணிநேர 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தொடர்பான தகவல்களை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.slbfe.lk இல் காணலாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக உறுதியளித்த செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றைக் கைப்பற்றுவதற்காக சோதனை நடத்தியுள்ளனர்.
திருக்கோவிலைச் சேர்ந்த நபர் ஒருவரின் முறைப்பாட்டையடுத்து, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துபாயில் வேலைக்காக ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 450,000 ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் அந்த வேலை கிடைக்கவில்லை எனவும் குறித்த நபர் முறைப்பாடளித்துள்ளார்.
அதன்படி வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை சுற்றிவளைத்த போது கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸ் நிலையத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கும் பயணத்தடை விதித்த நீதிமன்றம், இருவரையும் தலா 1 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளது. அதே நேரத்தில் திருக்கோவிலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இரண்டு தவணைகளில் 450,000 ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பான வழக்கு 2023 ஜனவரி 23 ஆம் திகதிக்கு வழக்கிடப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் ஏஜென்சிக்கு எதிராக மொத்தம் 08 புகார்கள் இதுவரை SLBFE க்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.