மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு : இராஜாங்க அமைச்சரின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது!

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் குறித்த இடத்தில் மீன் வளர்ப்பு இடம்பெறுவதாக காண்பித்து பாரிய குழி தோண்டப்பட்டு மணல் மேடு அமைத்து மணல் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனை கண்டித்து,  கிண்ணையடி பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு மணல் அகழ்வு நிறுத்தப்பட்து.

சில நாட்களுக்கு பின் சில நபர்கள் தங்களிடம் மணல் அகழ்வுக்கு அனுமதி உள்ளதென்று தெரிவித்து, மணல் அகழ்வதற்கு கனரக இயந்திரம், லொறி போன்றவற்றுடன் வந்து மணல் ஏற்றும்போது கிராம இளைஞர்கள், பொது அமைப்புக்களினால் சுற்றி வளைக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டது.

எனினும், அதற்கு பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த கோரியும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கிராம அமைப்புகள் தெரிவித்தனர்

அதனை அடுத்து,  இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக உதவி திட்மிடல் பணிப்பாளர்,  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

மணல் அகழ்வுக்கான அனுமதி வழங்கிய திணைக்களங்களை கொண்டு, குறித்த திட்டத்தினை நிறுத்தும்படியும், குறித்த மீன் வளர்ப்பு மற்றும் மணல் அகழ்வு திட்டங்களை கிண்ணையடி கிராம மக்கள், பொது அமைப்புகள் எதிர்ப்பதினால் குறித்த திட்டத்தினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கூறினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்