கிழக்கு மாகாண கல்வி சார் ஊழியர்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு – உதயரூபன் தெரிவிப்பு (வீடியா இணைப்பு)

உலக பெரும் தொற்றுக் காலத்தில் ஆசிரியர்களிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை பெற்றுக் கொள்ளல் என்ற அடிப்படையில் , கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

இங்கு இவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கொவிட் 19 தொடர்பாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோர் கல்வி சார் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தினை சம்மதம் இன்றி கட்டாயத்தின் பேரில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் உதயரூபன், பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அத்தோடு நமது தலைவர் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சட்டமா அதிபரும் பிரதிவாதியாக குறிப்பிட்டதன் காரணமாக சட்டமா அதிபர் அண்மையில் இது தொடர்பாக சம்மதம் தெரிவித்து மீண்டும் அந்த ஒரு நாள் பெற்றுக் கொண்ட சம்பள பணத்தினை திருப்பி செலுத்துவதாக உறுதிமொழி உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

இந்த உறுதிமொழியின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெறப்பட்ட 32.778 மில்லியன் ரூபா பணம் மீண்டும் அதிபர்கள் ஆசிரியர்களிடம் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களுக்கும் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகையில் மிகக் கூடிய பணத்தொகையாக திருகோணமலை கல்வி வலயத்தில் 2.895 மில்லியன் ரூபாவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 2.795 மில்லியன் ரூபாவும், கல்முனை கல்வி வலயத்தில் 3.846 மில்லியன் ரூபாவும் மீண்டும் அதிபர்கள், ஆசிரியர்களிடம்; திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

பணத்தினை மீளப்பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் கல்வி திணைக்களத்தின் குறித்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து பணத்தினை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு உதயரூபன் பனிப்புரை விடுத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=7B4GI-SB2e8&t=66s