கியூபா நோக்கி பயணமானார் ஜனாதிபதி : பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை காலை  கியூபாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் மீள நாடு திரும்பும் வரையில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர், மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, துபாய் சர்வதேச விமான நிலைய ஓய்வறையில் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன்போது, கொல்கத்தாவில் நடைபெறவுள்ள வங்காள உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததாக மம்தா பானர்ஜி தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.