கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்கள் மீது பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல்!
மட்டக்களப்பில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எமது செய்தி பிரிவு கருணா அம்மானை தொடர்பு கொண்டு வினவிய போது,
எமது தேசிய ஜனநாயக முன்னணியின் கட்சியின் வேட்பாளர் காரியாலயத்தின் முன்பாக நின்றிருந்த கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும், அங்கு வந்த வேறு கட்சியைச் சேர்ந்த குழுவொன்றுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் எமது வேட்பாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, இது தொடர்பில் நாங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
அதேவேளை, தாக்குதலில் காயமடைந்த வேட்பாளரை நாம் தொடர்பு கொண்டு வினவிய போது,
திட்டமிட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள், அத்துடன் எமது வேட்பாளர் ஒருவரை வாளால் வெட்டியதில் அவரது தலையில் மூன்று வாள்வெட்டு காயங்கள் ஏற்பட்டு, அவர் தற்போது சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், மற்றைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறோம். தோல்வி பயம் காரணமாக மட்டக்களப்பில் உள்ள பிரபல கட்சியை சேர்ந்தவர்கள் தான் இவ்வாறு எங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்