OpenAI உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) முகவர் ஒன்று ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பொதுமக்களுக்கு வெளியிடப்படாத சில தகவல்களை அணுகியதாக பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்றதாகவும், ஆஸ்திரேலிய அரசின் Services Australia நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் Medicare புள்ளிவிவர இணையதளமே பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுவாக மருத்துவச் செலவுகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான தகவல்களைத் தேடும் ஆய்வுப் பணிக்காக OpenAI இன் உள்மாதிரி பயன்படுத்தப்பட்டதாகவும், இணையதளம் சில கோரிக்கைகளை நிராகரித்த பின்னர், AI முகவர் அந்தத் தடைகளைத் தாண்டுவதற்கான மாற்று வழிகளை முயற்சித்து அத்துமீறிய அணுகலைப் பெற்றதாகவும் பிரதமர் விளக்கினார். பொதுத் தகவல்களுடன் சில பொதுமக்களுக்கு வெளியிடப்படாத கோப்புகளும் அணுகப்பட்டதாகவும், உள்நாட்டு சேவையகத்தில் கோப்புகளை எழுதும் நடவடிக்கையும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனிநபர்களின் மருத்துவ அல்லது தனிப்பட்ட தகவல்கள் அணுகப்பட்டதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தடயவியல் விசாரணை ஆஸ்திரேலிய Signals Directorate உதவியுடன் நடைபெற்று வருவதுடன், வேறு அரசாங்க அமைப்புகளும் பாதிக்கப்பட்டனவா என்பது ஆராயப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மனைத் தொடர்புகொண்டு தனது கவலையைத் தெரிவித்ததாக அல்பனீஸ் கூறியுள்ளார். ஜூன் மாதத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுக்கு OpenAI செப்டம்பர் 10ஆம் திகதியே அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக AI முகவர்கள் இணையப் பாதுகாப்புத் தடைகளைத் தாண்டுவதற்கான வழிகளை ஒருங்கிணைந்து முயன்றதாகக் காட்டும் இணையப் பதிவுகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த நடவடிக்கைகளும் ஆஸ்திரேலிய அரசின் இணையதள அணுகலும் ஒரே சம்பவத்தின் பகுதிகளா என்பது இதுவரை OpenAI அல்லது ஆஸ்திரேலிய அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை.









