NIRDC இன் கீழ் முதல் காலாண்டில் தெரிவு செய்யப்பட்ட 09 திட்டங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறை (NIRDC) இன் கீழ் இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 09 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல் தொடர்பான சான்றிதழ்களைக் கையளித்தல் மற்றும் அது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுலலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, 227 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி வசதிகள் வழங்கப்படவுள்ளதுடன், அதற்கான சான்றிதழ்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வழங்கப்பட்டன.

இலங்கை வங்கி ஊடாக இந்த நிதி வசதியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான வை.ஏ. ஜயதிலக ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், விண்ணப்பதாரர்களின் திட்டங்களுடன் தொடர்புடைய செயல்திறன் குறிகாட்டிகளுக்கு (KPI) ஏற்ப முன்னேற்றத்தை பரீட்சித்து, பகுதிகளாக வழங்கப்படவுள்ளது.

அதன்படி,

1- தொலைத்தொடர்பு சார்ந்த வலையமைப்பு ரீதியான சிறுவர் நேய இணையக் கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் நலனின் முன்னணி கண்டுபிடிப்பான Vx Safenet இற்கான சான்றிதழ் Visuamatix (Pvt) Ltd. நிறுவனத்தின் தீக்ஷண குமாரவுக்கும்,

2- Fractal Graphene and Activated கார்பன் தொழில்நுட்பம் போன்ற அதிநவீன இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Volfpack Energy சிறந்த கொள்ளளவு திட்டத்திற்கான சான்றிதழ் Volfpack Energy (Pvt) Ltd இன் சஞ்சீவ கருணாரத்னவிற்கும்,

3- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், சீனி அல்லது மது பயன்படுத்தாமல் கறுவாவில் உள்ள அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் பாதுகாத்து Cold Brewed கறுவா சாற்றைப் பிரித்தெடுக்கும் திட்டத்திற்கான சான்றிதழ் Pure Cinnamon Exports (Pvt) Ltd இன் முதித ஜயதிலகவிடமும்,

4- ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் சுத்தத்தை ஆய்வுகூடம் இன்றி விரைவாகவும் துல்லியமாகவும் பரிசோதிக்கக்கூடிய தனித்துவமான நவீன தொழிநுட்பத்துடன் கூடிய உபகரணத்தை அறிமுகப்படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆலோகா மையத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கான சான்றிதழ் பேராசிரியர் ஜீ.கே.டீ.எஸ். ஜயநெத்திக்கும்,

5- தேயிலை உற்பத்தியின் சிறப்பு மற்றும் நவீனமயப்படுத்தலை உலகிற்கு எடுத்துக் காட்டும் தேசிய அடையாளத்திற்கு முன்னுரிமை அளிக்கும் Samanala Farm திட்டத்திற்கான சான்றிதழ் Samanala Farm நிறுவனத்தின் திருமதி பபசரா மனதுங்கவுக்கும்,

6- சிங்கள எழுத்துக்களைத் தட்டச்சு செய்வதில் உள்ள சிரமத்தை நீக்கி, அரச சேவைகளை செயற்திறனாக்கவும், குறிப்பாக பார்வைக் குறைபாடுள்ள சமூகத்தை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்கவும் உருவாக்கப்பட்ட இயற்கை குரலுடன் கூடிய AI System (Chatbot) for Sinhala கட்டமைப்புக்கான சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி கல்விப் பிரிவைச் சேர்ந்த கலாநிதி ரணதில் புஷ்பானந்தவுக்கும்,

7- கிதுல் தொழிலுக்கு புத்துயிர் அளித்து, சீனியுடனான பானங்களுக்குப் பதிலாக இயற்கை நலன்மிக்க கிதுல் கோலா மற்றும் கொழுப்பு அற்ற பால் உற்பத்தி செய்யும் தனித்துவமான திட்டத்திற்குான சான்றிதழ் Planet’s Pick Holdings (Pvt) Ltd சார்பாக கபில விஜேசேகரவுக்கும்,

8- Flat knit தொழில்நுட்பம் மூலம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு, கலகெதர, மாத்தளை மற்றும் தம்புள்ளை போன்ற பகுதிகளில் பெண்களை வலுவூட்டுவதன் மூலம் உயர்ந்த சமூக தாக்கத்தை உருவாக்கும் TDR Knitting திட்டத்திற்கான சான்றிதழ் TDR Knitting (Pvt) Ltd இன் திருமதி லக்மாலி வனசிங்கவுக்கும்,

9- இரசாயன உரங்களின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்து, மண்ணில் வாழும் இயற்கை நுண்ணுயிர்களை செயலூட்டுவதன் அதிக விளைச்சலை வழங்கும், “Magic-grow” மண் செயலூக்கத் திட்டத்திற்கான சான்றிதழ் Wasala Agro நிறுவனத்தின் வாசல சிறிவர்தனவிற்கும் கையளிக்கப்பட்டன.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருடன் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, டிஜிடல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய மற்றும் பிரதமரின் செயலாளர் உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதானிகள்,வங்கிகளின் தலைவர்கள் மற்றும் பிரதானிகள்,நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.