மட்டக்களப்பு சிறுவன் பாதுகாப்பு இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த சிறுவன் கல்முனை பாதுகாப்பு இல்லத்தில் (Save house ) தனது மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த சிறுவனின்  தந்தை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததேவன் தர்சாத் (வயது-14) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த நவம்பர் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொக்குவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கல்முனை பாதுகாப்பு இல்லத்தில் அன்றையதினம் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுவன் கடந்த புதன்கிழமை அதிகாலை 3.30 மணிளவில் உயிரிழந்துவிட்டதாக, சிறுவனின் குடும்பத்தாருக்கு கல்முனை சீர்திருத்த பாடசாலையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மகன் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவனின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனது மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையையும், சட்ட வைத்திய அறிக்கையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தனது மகனின் மரணத்தில் பல விதமான பொய் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்