
-மன்னார் நிருபர்-
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் மூன்று பிரதான கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்இபாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை செலுத்தி உள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
அதே வேளை ஈ.பி.டி.பி கட்சியானது மன்னார் மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகளும்,1 சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 9 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12 கட்சிகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும்,
முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.