
LPL போட்டி நிர்ணய வழக்கு இன்று நீதிமன்றில்!
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின்போது, ஒரு கிரிக்கெட் வீரரை ஆட்ட நிர்ணயத்திற்கு (Match-fixing) வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் (Dambulla Thunders) அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான் (Thamim Rahman) என்பவருக்கு இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி பிரதிவாதியை இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு கோடி ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதிவாதி, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகப் பிரதிவாதி சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
பிரதிவாதி பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற பங்களாதேஷ் பிரஜை எனவும், இந்த வழக்கு காரணமாகப் பிரதிவாதி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் இருப்பதாகவும், அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள் மற்றும் அவரது வணிக நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதனால், பிரதிவாதி இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வழக்கை விரைவாக முடிக்கத் தயாராக உள்ளார் என்றும், இது குறித்து சட்டமா அதிபருக்கு வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
அத்துடன் இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, பிரதிவாதி தரப்பு முன்வைத்த விடயங்கள் குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காகக் கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
