LGBT சமூகத்தினர் மற்றும் சமூகத்தின் மனநிலை

 

இன்றைய காலச்சுழற்சியில் சமூக நீதி, மனித உரிமைகள் மற்றும் மதிப்பீடுகள் அதிகமாக பேசப்படும் ஒரு கட்டத்தில், LGBT சமூகத்தினர் (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிய புரிந்துணர்வும், அன்பும், ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் மிக முக்கியமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

பல தசாப்தங்களாக இவ் இனத்தினர் புறக்கணிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சமூகத்தின் நிழலாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று நிலைமைகள் மாறத் தொடங்கியுள்ளன.

 

LGBT என்ற சொல்லின் கீழ் பல்வேறு தனிப்பட்ட பாலின அடையாளங்களும், பரஸ்பரக் காதலையும் கொண்ட மனிதர்கள் அடங்குகிறார்கள்.

இவர்களது வாழ்க்கைத் தேர்வுகள் அவர்கள் இயற்கையாக பிறந்ததற்கு ஏற்பும், மனநிலைக்கும் ஏற்பும் அமைகின்றன.

ஆனால் சமூகத்தின் பழமையான பாரம்பரியத்தினாலும் மத அடிப்படையிலான கட்டுப்பாடுகளாலும் இவர்கள் எப்போதும் “வழிமுறைக்கு எதிரானவர்கள்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

 

இன்று, விழிப்புணர்வு, கல்வி, ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் வாயிலாக மக்கள் மத்தியில் புரிதல் உருவாகியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை, LGBT சமூகத்தை அதிகம் ஏற்றுக்கொள்கின்றது.

அவர்களை ஒருவரைப்போல் நடத்துவதற்கான முனைப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றன. ஆனால் இன்னும் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில், இந்த சமூகத்தைப் பற்றி தவறான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. இது அவர்களின் வாழ்க்கையை அவதிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கின்றது.

 

LGBT இனத்தினருக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது ஒரு அடிப்படை கோரிக்கையாக உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சட்ட உரிமைகள் போன்ற இடங்களில் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை சமூகம் நிறுத்த வேண்டும். சில நாடுகளில் திருமண உரிமை, பாலின அடையாளம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், இலங்கையில் இது இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும், சில தனியார் நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இத்துறையில் முன்னேற்றங்களை ஏற்படுத்த முயல்கின்றன.

 

முன்னெடுப்பும், புரிந்துணர்வும் கொண்ட சமூகமே அனைவரும் நம்பிக்கையுடன் வாழும் சமுதாயமாக மாற முடியும். LGBT சமூகத்தினரின் உணர்வுகள், வாழ்க்கைத் தேர்வுகள், உரிமைகள் அனைத்தும் மனிதருக்கே உரியவை என்பதை ஏற்க வேண்டும்.

அவர்களது பயணத்தை ஏற்கும் மனநிலை இன்று உருவாகி கொண்டிருப்பது எதிர்காலத்தில் சமத்துவம் அடைந்த சமுதாயத்தை கட்டமைக்க வழிவகுக்கும்.

அதனால், அனைவரும் மறுப்பதற்கும் நியாயமற்ற நம்பிக்கைகளுக்கும் பதிலாக, மனிதநேயம் மற்றும் அக்கறை கொண்டு இந்த சமூகத்தினரை அணுக வேண்டும். இது தான் உண்மையான வளர்ச்சி.

 

யோகராஜா பவ்யா

2ம் வருடம்,

உளவியல் துறை,

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.