காத்தான்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : மேலதிக விசாரணைகள் ஆரம்பம்!

-அம்பாறை நிருபர்-

மட்டக்களப்பு-காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன், குறித்த துப்பாக்கிதாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கி, துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (வயது 32) என்பவரே காயமடைந்துள்ளதுடன், இப்பெண்ணின் கணவர் அவுஸ்ரேலியா நாட்டில் தற்போது இருப்பதாகவும், அவர் ஒரு மௌலவி எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும்,  காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி‌ கமராக்களையும் சோதனை செய்து, சந்தேக நபர் அடையாளம் கண்டு சந்தேக நபரை நேற்று மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்துடன்,  காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்