திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் கைது
திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர், நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதேச ஊடகவியலாளர் இவ்வாறு போதை மாத்திரைகளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மொறவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான பிரதேச ஊடகவியலாளரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் சுகாதார சிற்றூழியராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
போதை தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
போதை மாத்திரைகளை வட்ஸ்அப் ஊடாக இளம் யுவதி ஒருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட காட்சிகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக, ஆரம்ப கட்ட விசாரணை மூலமாக தெரியவருகிறது. அத்துடன் ஒரு தொகை போக்குவரத்து ஆவணங்களும் இவரிடமிருந்து மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை மொறவெவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்