-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தொல்புரம்-கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியை சேர்ந்த, குகதீஸ்வரன் மயூரன் (வயது 27) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சபேஷ்வரன் ரஜீவன் மற்றும் கமலநாதன் பானுஷன் எனப்படும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே ஊரை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு முதல் முரண்பாடு இருந்து வந்துள்ளது.
தொல்புரம்-கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு குறித்த இடத்திற்கு மூன்று நண்பர்களுடன் வந்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டார்.
இதன்போது, சந்தேகநபரின் தாக்குதலுக்கு உள்ளாகி பானுஷன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

அதன்பின்னர் சந்தேக நபர் தப்பி செல்ல முயன்றபோது, கொலை செய்யப்பட்ட மயூரன் சந்தேகநபரை பிடிப்பதற்கு முயற்சித்தார்.
சந்தேகநபர் மயூரன் மீதும் அதே கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டார், மயூரன் சம்பவம் இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்வதற்கு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். இவ்வாறு கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றமை தெரியாத பொலிஸார், குறித்த சந்தேகநபரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் கொலைச் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சந்தேகநபரை வைத்தியசாலையில் வைத்து கைது செய்தனர்.
சந்தேகநபர் தற்பொது பொலிஸ் காவலில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

