தாயகம் நோக்கி புறப்பட்டார் ஈரான் ஜனாதிபதி

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் நோக்கி புறப்பட்டார்.

ஈரானுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கின்றன.

நேற்று உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்தார்.

இதேவேளை, ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாசாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்