
ஓமான் மனித கடத்தல் கும்பல் : பெண் சந்தேக நபர் கைது
ஓமானில் இலங்கைப் பெண்கள் சம்பந்தப்பட்ட மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
மனித கடத்தல் கும்பல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
49 வயதுடைய பெண் இன்று காலை தனது சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளான ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பப்பட்டு பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்பட்ட மனித கடத்தல் கும்பல் தொடர்பில் இதுவரை பல கைதுகள் செய்யப்பட்டுள்ளன.
மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நவம்பர் 19 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்யப்பட்டு நவம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் உள்ளூர் முகவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் டிசம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கைப் பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஓமனுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
சுற்றுலா விசாவின் கீழ் இலங்கைப் பெண்கள் ஓமானுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
அவர்கள் வந்தவுடன், இந்த பெண்களுக்கு வாக்குறுதியளித்தபடி வேலைகள் வழங்கப்படவில்லை, அதற்கு பதிலாக ஏலத்தில் விற்கப்படுகின்றனர்.
ஓமானுக்கு வந்த இலங்கை பெண் வீட்டுப் பணியாளர்களிடமிருந்து நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகளைப் பெறுவதாகவும், அவர்களில் பெரும்பாலோர் வருகை அல்லது சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி அவர்களை வேலை விசாக்களாக மாற்றும் நோக்கில் வந்தவர்கள் என்றும் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பலர் நேர்மையற்ற மற்றும் பதிவு செய்யப்படாத முகவர்களால் கடத்தப்பட்டதாகக் கூறிய தூதரகம், அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்கள் உட்பட பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகக் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போது சுமார் 90 இலங்கைப் பெண் வீட்டுப் பணியாளர்கள் ஓமானில் நாடு திரும்ப உதவி கோரி தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.