நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்-

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகின்றது.

பகிர்ந்துண்டு வாழ்வோம் என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை நல்லூரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நல்லூர் பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கான நிதி அனுசரணையைக் கனடாவில் இருந்து வருகை தந்திருந்த செல்லையா சத்தியலிங்கம் மற்றும் இலண்டன் வாழ் சற்குணநாதன் துஷாகரன் ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.

கொரோனாப் பெருந் தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட தொழில் இழப்பைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சி பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர்க் காலத்தில் ஆரம்பித்த அற்றார் அழிபசி தீர்த்தல் திட்டத்தை இன்றுவரை கைவிடாது தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்