சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் FBC{எஃப்.பி.சி (முழு இரத்த அணுக்களின் எண்ணிக்கை)}, FBS{எஃப்.பி.எஸ் (வெறும் வயிற்று சர்க்கரை அளவு)}, RBS{ஆர்.பி.எஸ் (சீரற்ற நேர சர்க்கரை அளவு)}, HbA1C{ஹெச்பிஏ1சி (மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு)}
, Dengue NS1(டெங்கு என்.எஸ்1), COVID-19 PCR(கோவிட்-19 பி.சி.ஆர்), Rapid Antigen(ரேபிட் ஆண்டிஜென்) உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கான கட்டணப் பட்டியல், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, சில பரிசோதனைகளுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணங்கள் தொடர்ந்து அமுலில் இருப்பதாக அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, முழுமையான இரத்தப் பரிசோதனை (FBC) மற்றும் அறிக்கைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.400 ஆகும். டெங்கு NS1 Antigen பரிசோதனை மற்றும் அறிக்கைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் 2020 ஜூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்ட 2186/17 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம் நிர்ணயிக்கப்பட்டவை.
அதேபோல், COVID-19 PCR பரிசோதனைக்கு ரூ.6,500 மற்றும் COVID-19 Rapid Antigen Test (RAT) பரிசோதனைக்கு ரூ.2,000 என்ற அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை 2021 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெளியிடப்பட்ட 2240/30 என்ற அதிவிசேட வர்த்தமானி மூலம் அமுல்படுத்தப்பட்டவை.
இதனிடையே, FBS, RBS, HbA1C, Lipid Profile, LFT, RFT, UFR, CRP, CT Scan, MRI, Ultrasound, Mammogram மற்றும் DEXA Scan உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வர்த்தமானி மூலம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணங்கள் அல்ல என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதிகாரப்பூர்வ பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு 1977 என்ற நுகர்வோர் அதிகாரசபையின் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.









