
பொலிஸ் அதிகாரியாக போலியாக நடித்து பணம் மோசடி செய்தவர் கைது!
பானதுர வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக நடித்து, பல மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதி மற்றும் உணவக உரிமையாளர்களிடம் இருந்து, மோசடியாக பணம் பெற்ற சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடையை சேர்ந்த 31 வயதான சந்தேக நபர், தன்னை பொலிஸ் உயரதிகாரி என தெரிவித்து, பல வர்த்தகர்களை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு பணம் பெற்றதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி, சட்டவிரோதமாகப் பெரும் தொகையான பணத்தை பெற்றுள்ளார்.
நேற்று புதன்கிழமை, கலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகே அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 25.620 கிராம் ஹெராயினையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல், திருட்டு, கொள்ளை மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக சந்தேக நபர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அம்பலாங்கொட, இரத்தினபுரி, ஹொரன, பானதுர, மாரவில மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிலையங்களின் உரிமையாளர்களை அவர் குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களால் ஏற்படும் அச்சுறுத்தல் அல்லது சட்டவிரோத பண வசூல் சம்பவங்களை, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 119, 118 ஆகிய அவசர உதவி இலக்கங்களிலோ முறைப்பாடு செய்யுமாறு, இலங்கை பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
