சீனாவின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான DeepSeek, செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தாக்கங்கள் குறித்து இந்த வாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விளக்கமளிக்கவுள்ளது. 15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்புச் சபை, புதன்கிழமை AI மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் சிறப்பு அமர்வை நடத்தவுள்ளது.
ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த உயர்மட்டக் கூட்டங்கள் நியூயோர்க்கில் நடைபெறும் நிலையில் இந்த விவாதம் இடம்பெறுகிறது. AI தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதுடன், எதிர்கால AI அமைப்புகள் மனிதர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்கு அப்பால் தன்னிச்சையாக திறன்களை மேம்படுத்தக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்துள்ளன.
DeepSeek நிறுவனத்துடன் மேலும் சில சீன AI நிறுவனங்களான Moonshot உள்ளிட்டவையும் கருத்துகளை முன்வைக்க அழைக்கப்பட்டுள்ளன. எனினும், DeepSeek நிறுவனத்தின் நிறுவனர் லியாங் வென்ஃபெங் இந்தக் கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படவில்லை.
இதனிடையே, OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மானும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். AI திறன்கள் மற்றும் அபாயங்களை மதிப்பிடுவதற்கான பொதுவான சர்வதேச தரநிலைகள், சம்பவங்களைப் பதிவு செய்யும் நடைமுறைகள் மற்றும் நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என OpenAI முன்மொழிந்துள்ளது.
AI மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை ஏற்கனவே 2023ஆம் ஆண்டில் முதன்முறையாக விவாதித்திருந்தது. தற்போதைய அமர்வு, AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் அதன் பாதுகாப்பு அபாயங்களுக்கும் இடையில் சர்வதேச அளவில் எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துவது என்பது தொடர்பான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.









