அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், CNN(சீஎன்என்), MS NOW(எம்எஸ் நவ்) மற்றும் Politico(பொலிட்டிக்கோ) ஆகிய மூன்று முக்கிய செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்களை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிப்பதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளார். இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வரும் என அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகங்கள் தனது நிர்வாகம் தொடர்பில் தொடர்ந்து “போலியான செய்திகள்” மற்றும் “உண்மைக்குப் புறம்பான தகவல்களை” வெளியிடுவதாக ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு குறிப்பிட்ட ஒரு செய்தி சம்பவம் காரணமல்ல என்றும், கடந்த சில ஆண்டுகளில் வெளியான செய்திகளின் ஒட்டுமொத்த விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதேபோன்ற நடவடிக்கை எதிர்காலத்தில் வேறு ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக எடுக்கப்படலாம் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். New York Times(நியூயார்க் டைம்ஸ்) மற்றும் Washington Post(வாஷிங்டன் போஸ்ட்) ஆகிய ஊடகங்களையும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, CNN தனது வெள்ளை மாளிகை செய்தியாளர் குழுவை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் செய்தி சேகரிக்கும் உரிமை அமெரிக்க அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. Politicoவும் தனது செய்திப் பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பதாகவும், ஊடகச் சுதந்திரத்துக்கான அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளது.
ட்ரம்பின் அறிவிப்பு சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என சட்ட மற்றும் ஊடகச் சுதந்திர நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்தத் தடையின் முழுமையான நடைமுறை மற்றும் எந்தெந்த வகையான வெள்ளை மாளிகை அணுகல்கள் பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை.









