பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல்: 15 பேர் விடுதலை

20

-மூதூர் நிருபர்-

மூதூர் – இருதயபுரம் பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னணியில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை நகர்த்தல் விண்ணப்பம் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட்டனர்.

இதன் போது 15 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு மேலும் இவ்வழக்கு நவம்பர் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூதூர் -இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு கோரி குறித்த மதுபான சாலைக்கு முன்னால் பொதுமக்கள் சுழற்சிமுறை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.இதன்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடந்த 25 ஆம் திகதி இரவு மோதல் சம்பவம் இடம்பெற்றது.இதில் இரண்டு பொலிஸாரும், பொதுமகன் ஒருவரும் காயமுற்றிருந்தனர்.

இதன் பின்னணியில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் அன்றைய தினம் 11 ஆண்கள், 04 பெண்கள் அடங்களாக 15 பேரை கைது செய்து 26 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து ஜுலை 03 ஆம் திகதி வரை இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த விடயம் நகர்த்தல் விண்ணப்பம் மூலம் இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவர்கள் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath