குழந்தைகளுக்கான மருந்துகள் நாட்டில் இல்லை

குழந்தைகளுக்கான மருந்துகள் கூட நாட்டில் இல்லை, ஆனால் அரசாங்கமோ அமைச்சப் பதவி சூதில்.

தற்போது அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,லேடி ரிச்வே சிறுவர் மருத்துவமனை கூட இந்நாட்களில் மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. எனவும்,இவ்வாறானதொரு நிலை நிலவுகின்ற போதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி, சலுகை மற்றும் வரப்பிரசாதங்களை அனுபவித்து வருகின்றது எனவும்,மக்களின் வலிகளையும் தியாகங்களையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்காலத்தில் உருவாகும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தியாகங்களைச் செய்வது அரசாங்கமே அன்றி மக்கள் அல்ல எனவும் தெரிவித்தார்.

கடந்த 23.10.2022 ஆம் திகதி இடம் பெற்ற ஹகுரன்கெத்த தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அரச சுகபோகங்களை அனுபவிக்க நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம் எனவும், அரச சுகபோகங்களை அநுபவிக்க மக்களால் மட்டுமே முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம், உணவுப் பொருட்களின் விலை,பணவீக்கம் என அனைத்தும் உயர்ந்துள்ள நிலையில் சம்பளம் மாத்திரம் குறைந்துள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்நாட்டில் பாடசாலை மாணவர்களின் மதிய உணவுப் பெட்டிகள் கூட காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலைக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்,ஆனால் நாட்டை அழித்த இளவரசர்கள் சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள வரிகளுக்கு மேலதிகமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் பல வரிகளை விதிக்க தயாராக உள்ளனர் எனவும்,சில நேரங்களில் நாம் எடுக்கும் மூச்சுக்குக் கூட வரி விதிக்கப்படலாம் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பெறுமதிமிக்க வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.