கம்பளை ஆதார (போதனா) வைத்தியசாலையில் 500 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

கம்பளை ஆதார (போதனா)  வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும், கண்புரை சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது.

இதன்போது, 500 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை மூலம் கண்களில் லென்ஸ்கள் பொருத்தப்படவுள்ளது.

பல மாதங்களாக திட்டமிட்டு, கடின உழைப்பின் பின்னர், இன்று இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் நிர்வாக இயக்குனர் வைத்தியர் துமிந்த டயஸின் முழு மேற்பார்வையின் கீழ், சிறப்பு கண் வைத்தியர் அமில ஜெயரத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டம், இலங்கை கண் மருத்துவர்கள் கல்லூரியால் நடத்தப்படுகிறது.

கம்பளை போதனா வைத்தியசாலையின் நூற்றாண்டு விழாவைக் சிறப்பிக்கும் வகையில், கம்பளை நகரில் மிகவும் வறுமைக்குட்பட்ட பார்வை கோளாறு உள்ள 500 நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சத்திர சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியிலிருந்து சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நோயாளிக்கும், மிதமான காலை உணவு, பானங்கள், தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மேலும், வைத்தியசாலையிலிருந்து இருந்து வெளியேறுவதற்கு முன்பு, மருந்துகளை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பது குறித்து முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றது.

இன்று மாலைக்குள், 300 நோயாளிகள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள், என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கினறன.

நாடு முழுவதிலுமிருந்து மிகவும் அனுபவம் வாய்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள், கம்பளை நகருக்கு சென்று இச்சேவையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.