மட்டு மாநகர சபையின் கட்டளைச் சட்டங்களை மீறி முதல்வர் வெளிநாட்டு பயணம் : பிரதி முதல்வர் சத்தியசீலன்

மட்டு மாநகர சபையின் கட்டளைச் சட்டங்களை மீறி முதல்வரது வெளிநாட்டு பயணம் அமைந்துள்ளதனால் தன்னால் தொடர்ந்து பதில் கடமை ஆற்றமுடியாது என , மட்டு மாநகரசபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் இன்று திங்கட்கிழமை அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மட்டு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன். வெளிநாடு செல்வதாகவும் அந்த வெளிநாட்டு பயணம் ஒரு உத்தியோகபூர்வமான பயணம்  என்றும் ,  தான் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில் மட்டு மாநகர சபையின் பதில் கடமையை ஆற்றும் படியும் கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் 26 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதம் எனது கரங்களுக்கு 28 ஆம் திகதிதான் கிடைத்தது. அதற்குரிய எந்த விதமான ஆவணங்களும் அந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை என,  மட்டு மாநகர சபையின் பிரதி முதல்வர் சத்தியசீலன் தெரிவித்தார்.

முதல்வர் இந்த பயணத்தின் போது மாநகர சபையின் கட்டளை சட்டங்களை மீறி செயல்பட்டு இருப்பதுடன். தான் விடுமுறையில் செல்வதாகவும் குறிப்பிட்டு அந்த கடிதத்தை தாமதமாக அனுப்பியதன் பின்புலம் என்ன , எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டு மாநகர சபையின் நடைமுறைகளை முதல்வர் உரிய முறையில் கடைபிடிக்காமல் வெளிநாடு சென்றிருந்த சமயம் மாநகர சபையில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டு இருந்தால் இதற்கு யார் பொறுப்பு கூறுவது. அரச உடைமைகளை தவறாக பயன்படுத்துவது மிக வேதனையான விடயமாகும்.

முதல்வரால் குறிப்பிட்ட திகதி வரை என்னால் பதில் கடமை ஆற்ற முடியாதென ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கின்றேன். இவ்விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் அவர்களுக்கும் மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளதாகவும்,  இதற்குரிய பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எனக்கு கிடைக்கும் வரை தன்னால் பதில் கடமையை ஆற்ற முடியாது எனவும் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.