மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அபிவிருத்திகுழு செயலாளர் திரு வி சுதாகரன் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் திருமதி நி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் திரு என் குகதாசன், ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி என் ருதேசன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் 4 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிக புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

அதன்படி பாடசாலை 100 வீத சித்தியை பெற்றுள்ளது,  கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில், இந்த வருடம் சித்தியடைந்த வீதம் பாரிய அளவில் உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

நிகழ்வில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, பரிசில்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் திருமதி மனோன்மணி கணேசமூர்த்தி ஆசிரியர் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்