
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு பிணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தியாகதீபம் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தமைக்காக பயங்கரவாத தடைசட்டத்திற்கு அமைவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி கோண்டாவில் பகுதியில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை சிவாஜிலிங்கம் முன்னெடுத்திருந்தார் என சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகள் 7 தடவைகள் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சட்டத்தரணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் பிரசன்னமாகினார்.
2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமைக்காக கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது தனது சட்டத்தரணிகளுடன் பிரசன்னமாகியிருந்த சிவாஜிலிங்கம், மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா சென்றிருந்தமையினால் சமூகமளிக்க முடியவில்லை என கூறியதோடு, மருத்துவ சான்றிதழ்களையும் சட்டத்தரணி வாயிலாக சமர்ப்பித்தார்.
மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்த சிவாஜிலிங்கத்தின் சட்டத்தரணிகள், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டால் உயிராபத்து ஏற்படுவதற்கு சாத்தியமுள்ளதாக தெரிவித்தனர்.
இதனை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் சிவாஜிலிங்கத்தை பினையில் செல்ல உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கினை எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
