அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது – 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை வீட்டில் தனித்திருந்த போது, வீட்டின் பின் பகுதிக்கு சென்ற வேளை திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார்.

சுமார் 4 மணி நேரத்தின் பின்னர் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பி, வீட்டில் இருந்தவரை காணவில்லை என தேடிய போது , வீட்டின் பின் முற்றத்தில் கடும் வெய்யிலுக்குள் விழுந்து கிடந்ததை கண்ணுற்று அவரை மீட்டு , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

உடலில் வெப்ப கொப்பளங்கள் காணப்பட்டதாகவும் , அவரது உயிரிழப்புக்கு அதிக வெப்பமே காரணம் என உடற்கூற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு அண்மைய நாட்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொது வைத்திய நிபுணர் ரி. பேரின்பராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்