பாணந்துறை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? கப்பலில் சுமார் 300 சிறுவர்கள்?

ஈரானியக் கப்பலொன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பில் திசைமாறி தத்தளித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலில் சுமார் 300 சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்காக 24 மணித்தியாலங்களுக்கு இலங்கையின் துறைமுகமொன்றிற்குள் நுழைய அனுமதி வழங்குமாறு கொழும்பிலுள்ள ஈரானியத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முன்வைக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை காலை ஈரானியத் தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.

இதன்போது, அங்கிருந்த அதிகாரிகள் இந்த இக்கட்டான நிலைமை குறித்து அவருக்கு விளக்கமளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த விடயத்தில் தலையிட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன் பின்னரே, குறித்த கப்பல் இலங்கையின் துறைமுகமொன்றிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று புதன்கிழமை காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.

குறித்த கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டொர்பிடோ தாக்குதல் மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.