
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையில் கைது!
இந்த வார தொடக்கத்தில் இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பில் கைது செய்துள்ளது.
44 வயதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகள் விசாரணையில் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிரேஷ்ட டிஐஜி தலைமையில் சிறப்புக் குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமித்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையில் உள்ள பல நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய இலங்கை பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
நகரின் விமான நிலையம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் இரகசியத் தகவலைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்த வாரம் நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்.
பெரியமுல்லைச் சேர்ந்த 33 வயதான மொஹமட் நுஸ்ரத், கிராண்ட்பாஸைச் சேர்ந்த 27 வயதான மொஹமட் நஃப்ரான், மாளிகாவத்தையைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் ஃபரிஷ் மற்றும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 43 வயதான மொஹமட் ரஷ்டீன் ஆகியோர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 2004ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரபல குற்றவாளியான “பொட நௌபர்” எனப்படும் நியாஸ் நௌபரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும், இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
