
சாதனையாளர்கள் கெளரவிப்பு விழா
-கிளிநொச்சி நிருபர்-
அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டி, சாதனைபடைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்களையும், அவர்களது பெற்றார்களையும் கெளரவிக்கும் விழா நேற்று புதன்கிழமை பளை மத்திய கல்லூரி அதிபர் க.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் சி.க.கிருஸ்னேந்திரன், சிறப்பு விருந்தினராக மு.காந்தச்செல்வன் (ADE-Phy Edu.), கெளரவ விருந்தினர்களாக ஆ.பவானந்தன் (ISA-Phy Edu) மற்றும் கிருபா லேணர்ஸ் உரிமையாளர் கிருபாகரன், கல்லூரியின் பழையமாணவர் காந்தரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஹரிகரன், விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் டிலக்சன் மற்றும் பெற்றார்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டு கெளரவிப்பு பட்டயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன், கல்லூரியின் லண்டன் வாழ் பழையமாணவரும், பாடசாலையின் வளர்ச்சியில் அயராது பாடுபடுபவர்களில் ஒருவருமான காந்தரூபன் வெற்றிபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா வீதம், நிதியுதவி வழங்கி வைத்தார் என்பதுடன், கிருபா லேணர்ஸ் உரிமையாளர் கிருபாகரன் 25,000 பெறுமதியான கெளரவிப்பு பட்டயங்கள் (Sealed) வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது.
