இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இந்திய அரசினால் பரிசாக வழங்கப்பட்ட டோர்னியர் 228 (Dornier (INDO-228) கடல்சார் ரோந்து விமானம் இன்று இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விமானத்தை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.

இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட டோர்னியர் 228 ரக விமானம் இலங்கையின் பாதுகாப்பை பலப்படுத்தும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான ஒத்துழைப்பின் மற்ற பகுதிகளின் பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோர்னியரின் பரிசு இலங்கைக்கு பொருத்தமானது மற்றும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு படியாகும் என்று உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, “பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர் 228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்”, என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் சதீஷ் என் கோர்மடே உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.