கிழக்கில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மனிதாபிமான பணி

-வாழைச்சேனை நிருபர்-

திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் -224 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கபீர் முஹம்மட் இப்றாஹீம் என்பவர் அண்மையில் மூதூரில் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மூன்று சிறு பிள்ளைகளின் தந்தையான இப்ராஹிமின் இழப்பு, அவரின்  குடும்ப நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இனமத வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வரும் தியாகி அறக்கொடை நிறுவனம் இப்ராஹிமின் குடும்பத்திற்கும் உதவ முன்வந்தது.

இதற்கமைவாக இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கபீர் முஹம்மட் இப்றாஹீம் அவர்களின் குடும்ப மற்றும் பிள்ளைகளின் பராமரிப்பு செலவிற்காக ஐந்து லட்சம் ரூபாய் உதவித்தொகை அந் நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், மூதூர் அனைத்துப்பள்ளிவாயல் தலைவர் சாஹூல் கமீது தஸ்ரிக் (மௌலவி) மூதூர் இளைஞர் சேவை அதிகாரி ஏ.எம்.றிஸ்வி, இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் தலைவர் தாவூத் முகம்மது உமர் அறபாத் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.