ஏற்கனவே பயிரிட்டவைகளுக்கே உரமில்லை என விவசாயிகள் விசனம்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற்கொண்டு வரும் விவசாயிகள் பலர் கிருமி நாசினி மற்றும் களைநாசினி இரசாயன உரம் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கல்மடு குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கை மேற் கொள்ளப்பட்டு தற்பொழுது 50 நாட்கள் கடந்த நிலையிலும், கமநல சேவை நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் சேதனப் பசளை இதுவரையில் பலருக்கு கிடைக்கப் பெறவில்லை.

அத்துடன், பயிர்களுக்கான களைநாசினி பெறமுடியாத நிலையில் பயிர்கள் முழுதாக கொறைபுட்கள் நிறைந்து காணப்படுவதுடன், கிருமி நாசினிகள் இல்லாத காரணத்தினால் பல விதமான பங்கஸ் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் பயிர்செய்கையை மேற்கொண்டு வரும் பல விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக தரிசு நிலமாக உள்ள அனைத்து இடங்களிலும் பயிற்செய்கை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பயிர்களை அறுவடை செய்வதற்கான கிருமி நாசினி, களைநாசினி உரம் வழங்க முடியாத நிலையில் உள்ள அரசாங்கத்தால் எப்படி இவ்வாறு கூற முடியும் என தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஓரளவேனும் நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் நமக்கான கிருமி நாசினி களைநாசினி மற்றும் உரங்களை வழங்க வேண்டும், என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடமும் இதே போன்று பயிர்செய்கையில் ஈடுபட்டு பல விவசாயிகள் ஆயிரக்கணக்கான பயிர்களை இழந்த போதும், அதற்கான நஷ்ட ஈடு எதையும் அரசாங்கம் வழங்கவில்லை, எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.