
-யாழ் நிருபர், கிளிநொச்சி நிருபர்-
ஊரடங்கு சட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து தளர்த்தப்பட்ட நிலையில் வடமராட்சியின் நெல்லியடி, பருத்தித்துறை, மந்திகை பகுதிகளில் அதிகளவான மக்கள் கூட்டம் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் கூடியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொளுத்தும் அகோர வெயிலையும் பொருட்படுத்தாது எரிபொருள் நிரப்புவதற்க்காக தமது வாகனங்கள் சகிதம் மிக நீண்ட வரிசையில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நின்றிருந்தனர்.
இதே வேளை, ஏற்கனவே பயிற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் பயிர்களை பராமரிக்க முடியாமலும், பயிர்செய்கையில் ஈடுபட இருப்பவர்கள் மண்ணெண்ணெய், உரம் இல்லாத காரணத்தினால் பயிர்செய்கையில் ஈடுபட முடியாத நிலையிலும் உள்ளனர்.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலும், தற்போதைய காலநிலை மாற்றத்தினால் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்ட முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வடமராட்சியிலுள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில், இராணுவம் மற்றும் பொலிஸார் கடமையிலிருந்தும் ஒழுங்குகளை மீறி முறைகேடுகள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
