இலங்கைக்கு கடத்த இருந்த இருதலை மணியன் பாம்பு, 6 கிளிகள் மீட்பு : இருவர் கைது

-மன்னார் நிருபர்-

ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரிய வகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வனத் துறையின் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை சந்தேகத்துக்கிடமான முறையில் இருவர் நிற்பதாக வன உயிரின உதவிப் பாதுகாப்பாளர் கணேசலிங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் வன உயிரின அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட இருவரையும் பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் ஒரு வாளியில் இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை உயிருடன் மீட்ட தோடு, அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இருவரும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இருவரும் தூத்துக்குடி பகுதியிலிருந்து இரு தலை மணியன் வகை மண்ணுளி பாம்பும், கிளியையும் ரயில் மூலம் ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லத் திட்ட மிட்டிருந்ததும், அங்கிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.