
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர், கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, அப்பகுதியில் புதைக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, கடந்த மார்ச் 9 ஆம் திகதி திங்கட்கிழமை, களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம் கட்ட அகழ்வு பணி, மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இவ்வழக்கில் முன்னிலையாகிய சட்டத்தரணி தெரிவித்தார்.
அதன்படி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணி றாஸீ முஹம்மத் உள்ளிட்ட சட்டத்தரணி குழுவினர், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிசார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், குற்ற தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட பலர் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இதற்போது, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
