அமெரிக்காவில் ட்ரம்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்த “No Kings” என்ற மக்கள் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 2025 ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பின் கடுமையான குடிவரவு கொள்கைகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வொஷிங்டன் டி.சி. மினியாபோலிஸ், சிகாகோ மற்றும் சென் பிரான்சிஸ்கோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 6,46,000 மக்கள் தொகையைக் கொண்ட சிறிய மாநிலமான வெர்மான்ட்டில் மாத்திரம் 40க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்ட தினங்களில் ஒன்றாக இந்த சனிக்கிழமை அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.