கணவனால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் இரண்டு மாதங்களின் பின் இன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பு-கொக்கடிச்சோலை பிரதேசத்தில், மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மனைவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி இரண்டு மாதங்களின் பின்னர், இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு-நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த, மயில்வாகனம் இன்பமலர்தேவி (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி 17 ம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததில், அவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 20ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

படுகாயமடைந்த பெண், 10 நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் சம்பவ தினமான இன்று காலை அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.