4 நாடுகளிலிருந்து மாணவர் விசாவுக்கு தடை விதித்த பிரித்தானியா!

பிரித்தானியாவிற்கு சட்டப்பூர்வமான வழிகளில் வருகை தந்து, பின்னர் அரசியல் தஞ்சம் (Asylum) கோருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய உள்துறை அமைச்சு (Home Office) மிகக்கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன்படி ஆப்கானிஸ்தான், கேமரூன், மியன்மார் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மாணவர் விசா (Student Visa) வழங்குவதை பிரித்தானியா நிறுத்தியுள்ளது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களுக்கு திறன்சார் பணியாளர் விசா (Skilled Work Visa) வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

2021 முதல் 2025 வரையான காலப்பகுதியில், மேற்கூறிய நான்கு நாடுகளிலிருந்தும் மாணவர் விசாவில் வந்து தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 135,000 பேர் சட்டப்பூர்வ விசாக்கள் மூலம் நாட்டிற்குள் நுழைந்து, பின்னர் ஏதிலிகளாக தஞ்சம் கோரியுள்ளனர்.

அதில் 13% மாணவர் விசாவில் வந்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரித்தானிய அரசு ஏதிலிகள் தொடர்பான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது.

இது டென்மார்க் நாட்டின் கடுமையான குடிவரவு முறையை (Danish Model) பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இனி ஏதிலிகள் அந்தஸ்து பெற்ற பெரியவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் நிலைமை ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் ஒருமுறை மீளாய்வு செய்யப்படும்.

ஒரு அகதியின் தாய்நாடு பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கப்பட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.

இதற்கு முன்னர், அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கு 5 ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், பின்னர் அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடிந்தது.

துணையின்றி வரும் சிறுவர்களுக்கு (Unaccompanied children) தொடர்ந்து 5 ஆண்டுகள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.

ஏற்கனவே நாட்டில் உள்ள அகதிகளின் விண்ணப்பங்கள் பழைய விதிகளின் படியே பரிசீலிக்கப்படும்.

இது குறித்து பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டின் தாராள மனப்பான்மையை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு விசா வழங்க மறுக்கும் முன்னோடியில்லாத இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய அரசியலில் குடிவரவு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், குறிப்பாக வலதுசாரி கட்சிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.