காலி கடற்பரப்பில் விபத்திற்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பில் அமைச்சர் தெரிவித்த தகவல்கள்!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த IRIS Dena என்ற குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை இலங்கைக் கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா’ (IRIS Dena) என்ற கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதிகாலை 5:08 மணியளவில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு இந்த அவசரச் செய்தி கிடைத்தது.

இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது.

விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்திய இந்தச் சிறப்பான நடவடிக்கையின் மூலம், கடும் ஆபத்தில் இருந்த சுமார் 30 பேர் மீட்கப்பட்டனர்.அந்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

அந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

அதேவேளை ,மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மோதல் நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இந்தப் பதற்றம் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என இலங்கை கருதுகிறது.

நிலைமையைத் தணிக்க அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், மோதல்களைக் குறைக்க உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

பாரிய மனிதாபிமான மற்றும் பொருளாதார பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இலங்கையின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவருடனும், ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்,  என அவர் மேலும் தெரிவித்தார்.