சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகன் மீண்டும் இணைந்த புரோமோ!
தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திரையில் ஒன்றாகத் தோன்றும் புதிய திரைப்படத்தின் புரோமோ வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள இத்திரைப்படமானது, இவ்விரு மெகா நட்சத்திரங்களும் சுமார் 47 ஆண்டுகளின் பின்னர் இணைந்து நடிக்கும் முதல் சந்தர்ப்பமாக அமைகின்றது.
தற்காலிகமாக #KHXRK எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்டத் திட்டத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கின்றார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த முன்னோட்டக் காட்சி (Promo), ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இரு துருவங்களாகத் திகழும் இவ்விரு நடிகர்களையும் ஒரே திரையில் காண்பது அரிதான ஒன்று என்பதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவ்விருவரும் கடந்த 1970களின் இறுப்பகுதியில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ (1975) உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.
இறுதியாக 1979ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ மற்றும் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ஆகிய படங்களுக்குப் பின்னர், தற்போது சுமார் அரை நூற்றாண்டிற்குப் பிறகு இவர்கள் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதைக்களம், படப்பிடிப்புத் திகதிகள் மற்றும் வெளியீடு தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
