-நுவரெலியா நிருபர்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கொட்டியகல தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் நன்கு வளர்ந்த சிறுத்தையின் உடல் காணப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக சிறுத்தையின் அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது .
மேலும் தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களால் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களை சிறுத்தை வேட்டையாடுவதாலும், பல தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளுக்கு அருகில் கறவை மாடுகளை வளர்ப்பதாலும், தேயிலைத் தோட்டத்தில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிக்க இந்த கம்பி வலை அமைக்கப்பட்டிருக்கலாம், என வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு சிறுத்தை கம்பி வலையில் சிக்கியதாகவும், தப்பிக்க முயன்றபோது கம்பியால் சிறுத்தையின் உடலில் காயங்கள் இருப்பதாலும், கழுத்து பகுதி கம்பியில் சிக்கி, சிறுத்தை இறந்ததாகவும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தோட்ட நிர்வாக அதிகாரி மூலம் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத் தந்து, நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்
மேலும், சிறுத்தை சிக்கிய இடத்தை ஆய்வு செய்த பொகவந்தலாவ பொலிஸ் அதிகாரிகள், அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல கம்பி வேலிகளைக் கண்டுபிடித்து அவற்றை அகற்றி உள்ளனர் .
இறந்த சிறுத்தையில் உடலை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக, ரந்தெனிகல வனவிலங்குகள் திணைக்களத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
தேயிலைத் தோட்டத்தில் வலையை விரித்தவர்களை கண்டுபிடிக்க பொலிஸாருடன் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
